வாடாமல்லி
Friday, April 27, 2007
ஒய்ங்ங்ங்ங்ங்... காதுக்கை கோச்சி ஓடுது
"திரி திரி என திரிந்து படி படி என படித்து ஒல்.எல்லில் ஆல் எப் எடுத்து
காலையும் மாலையும் ரீயுசன் வீட்டிற்கு வந்தால் ரீவிசன்றோட்டிலை இருவர் செல்வதும் பாஷான்"

இந்த பாடல் வரிகளை உங்களில் எத்தனை பேர் கேள்விப்பட்டு இருக்கின்றீர்கள்? நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன். யாழ்ப்பாணத்து இளைஞர் யுவதிகளின் சிறந்த சித்திகளுக்கு முக்கிய காரணம் வகிப்பது நம்ம ரீயுசன்கள் என்று சொன்னால் மிகையாகது. அதனை கருத்தில் கொண்டு தான் இந்த வம்பு கவிஞன் இந்தக் கவிதையை உருவாக்கியிருப்பான் போலும். இதன் பல வரிகள் இப்போ மறந்து போச்சு.

அட அட 3ம் வகுப்பு தொடங்கியவுடனே ஸ்கொலர்சிப் பரீட்சைக்கு ரீயுசன் என்று சொல்லி வெளிக்கிட்டால் அடுத்த பத்து வருடங்களுக்கு அது தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். ரீயுசனுகளிலும் பல வகை அத்தனையும் தனி வகை. கணிதப் பாடத்திற்கு ஊரின் கிழக்குப் பக்கம் போகவேண்டும். பின்னர் ஆங்கிலப் பாடத்திற்கு ஊரின் வடக்குப் பக்கம் போகவேண்டும். அதை விட டான்ஸ் கிளாஸ் மியூசிக் கிளாஸ்க்கு ஊரின் மேற்குப் பக்கம் தெற்குப் பக்கம் என்று ஊரின் எல்லாப் பக்கமும் ஒரே நாளில் குறைந்தது ஒரு தடவை என்றாலும் சுற்றி வந்த பெருமை எம்மைத்தான் சாரும். (நல்ல காலம் ஊரின் தென்கிழக்கு பகுதியில் இருந்த வயலின் கிளாசையும் அதற்கு நேர் எதிராக இருந்த வீணை கிளாசையும் விட்டு வைத்து விட்டோம்) விடுமுறை நாட்களில் மட்டுமா ஓட்டம் நடக்கும்? பாடசாலை நாட்களில் காலை 6.00 க்கு கணித பாடத்திற்கு ரீயுசன் என்று வெளிக்கிடவேண்டும். விடியற்காலை முகம் கழுவியது பாதி கழுவாதது பாதி ரீ குடித்தது பாதி குடியாதது பாதி என்று வெளிக்கிட்டு போய் அங்கிருந்து விடிய 7 மணிக்கு வீட்டிற்கு வந்து குளித்தது பாதி குளியாதது பாதி சாப்பிட்டது பாதி சாப்பிடாதது பாதி என்று பாடசாலைக்கு ஓட்டம். பாடசாலையால் வந்து மிகுதி ஓட்டம்.சனி ஞாயிறு தினங்களில் சொல்லத்தேவையில்லை. அதுவும் சனிக்கிழமைகளில் மூச்சு விடக் கூட நேரம் இல்லாமால் ஓடுவோம். கடைசியாக தாயகத்தில் 7ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும் போது சனிக்கிழமைகளை மறக்க முடியாது. விடிய 7 மணிக்கு தமிழ் பாடத்துடன் வகுப்புக்கள் ஆரம்பமாகும். பின்னர் 30 நிமிட இடைவெளியில் அடுத்த ஆங்கிலப் பாடம் ஆரம்பமாகும். பின்னர் 1 மணி நேர இடைவெளியின் பின் எனக்குப் பிடிக்காத விஞ்ஞானப் பாடம் தொடங்கும். ( இந்த 30 நிமிட 1 மணித்தியாலா இடைவேளைகளின் போது நாம் புரிந்த சாதனைகள் அளப்பரியது. அதைப்பற்றி மற்றொரு பதிவில் விளக்கமாக எழுதுகின்றேன்.) கடைசியாக 2 மணியளவில் தான் வீட்டிற்கு வர நேரம் கிடைக்கும். வந்தவுடன் நேரடியாக கிணற்றடிக்குப் போனால் அங்கு எல்லோரும் முழுகி விட்டு நமக்கு என்று மிச்சம் வைத்த சீயாக்காய் (சிகைக்காய்) கொஞ்சம் இருக்கும். அதை எடுத்து தலையில் வைக்க அம்மம்மா வந்துவிடுவா தலை தேய்க்க. அவா தேய்க்கும் தேய்ப்பில் உள்ள பேன்கள் எல்லாம் செத்து விடும். பின்னர் வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு ஒரு குட்டித் தூக்கம். மீண்டும் 4 மணிக்கு ஓட்டம் ஆரம்பிக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சம் அமைதியாகப் போகும். ஆனால் அடுத்த நாள் பாடசாலைக்குரிய வீட்டு வேலைகள் செய்து முடிக்க வேண்டியிருப்பதால் அந்த நாளும் ஓட்டமாகத்தான் முடியும்.ஊரில் கர்த்தால் வந்தால் தான் நமக்கு சந்தோசம். கொஞ்சம் ஓய்வு என்றும் சொல்லலாம். அன்று தான் பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலடிக்கு விளையாடப்போவது. அதுவும் வீட்டில் கொஞ்சக் கணக்கு செய்து போட்டுத் தான் போகலாம். அப்படி போனாலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டை போய் விடணும். இல்லாட்டி அம்மம்மாவின் திட்டுக்கு ஆளாக வேண்டி வரும்.

அம்மம்மா அடிக்கடி சொல்லும் வார்த்தை இது தான் "பாலாப்பழம் போல மாறி மாறி எல்லா ரீயுசனுக்கும் காசைக் கொண்டு போய் கொண்டுவது பின்னர் விளையாட திரி" என்று. இப்படியாக இந்த ரியூசனால் வேண்டிய திட்டு கொஞ்சம் இல்லை. ரியூசனுக்கு லீவு எடுப்பது என்றால் ஒன்றில் தலையைப் பிடித்து தலையிடி என்று படுக்க வேணும் இல்லாட்டி வயித்தைப் பிடித்து வயித்து வலி என்று சொன்னால் தான் நிற்கலாம். இன்னொரு காலத்தில் வீட்டில் ஏதாவது பொய் சொல்லி நின்றாலும் அடுத்த நாள் ரியூசன் வாத்தியிடம் அடி வாங்குவதை நினைத்தே பயத்தில் ஒழுங்காக போய்க் கொண்டிருந்தோம். அதுவும் விஞ்ஞான வாத்தி பிரபாகரன் என்று பெயர். பலருக்கு அவரைத் தெரிந்திருக்கும். (சென்ஜோன்ஸ் இல் படிப்பித்தவர்) காதுக்கை கோச்சி (இரயில்) ஓட வைப்பார்.
ஆளை கண்டாலே நடுங்கும். அதுவும் இடப்பெயர்வு காரணமாக நமது வீட்டிற்கு பக்கத்திலே குடியிருந்தவர். அதற்கு பிறகு வீட்டில் கத்தி கதைக்கவே பயம். (ஆனால் வீட்டுகாராருக்கு ரொம்ப சந்தோசம்)

இப்படியாக இந்த ரீயுசனால் நாம் அனுபவித்த இன்னல்கள் இன்பங்கள் இரண்டுமே கொஞ்சம் நஞ்சமல்ல. இன்னும் எழுதலாம் ஆனால் வாசிக்கின்ற உங்களை அலுப்படிக்க விரும்பலை. இன்னும் ஒரு பதிவில் சந்திப்போம்.
posted by நந்தியா @ 9:23 PM
8 Comments:
  • At April 28, 2007 at 10:28 PM, Blogger வி. ஜெ. சந்திரன் said…

    :) காத்துக்க கோச்சி ஓட அடி ஒருதரிட்டையும் வாங்கினதில்லை.
    ஆனா ரியுசன் ஒரு இடத்திலை மட்டும் தான் படிச்சது. ஆனா காலமை பின்னேரம் எண்டு ரெண்டு நேரமும் இருக்கும்.

    ஆனா பிறகு அப்பிடி வைக்க கூட்டது எண்டு புலிகளின் கல்வி பிரிவு ஒரு ஒழுங்கை கொண்டு வந்ததால் கொஞ்சம் நிம்மதி.

     
  • At April 28, 2007 at 11:16 PM, Blogger நந்தியா said…

    ஆனா பிறகு அப்பிடி வைக்க கூட்டது எண்டு புலிகளின் கல்வி பிரிவு ஒரு ஒழுங்கை கொண்டு வந்ததால் கொஞ்சம் நிம்மதி.
    .... ஓஒ எத்தனையாம் ஆண்டு இந்த சட்டம் வந்தது? நான் தாயகத்தில் இருக்கும் மட்டும் இப்படி கேள்விப்படலை. உங்கள் வருகைக்கு நன்றிகள் விஐ சந்திரன்

     
  • At April 30, 2007 at 10:36 AM, Blogger பாரதி தம்பி said…

    தமிழீழ சூழலின் சில வாழ்வியல் விடயங்களை புரிந்துகொள்ள உதவியது. இம்மாதிரியான எழுத்துக்களும் இங்கு அவசியமே..

     
  • At May 3, 2007 at 7:38 PM, Blogger நந்தியா said…

    தமிழீழ சூழலின் சில வாழ்வியல் விடயங்களை புரிந்துகொள்ள உதவியது. இம்மாதிரியான எழுத்துக்களும் இங்கு அவசியமே..

    ////////
    கட்டாயமாக தொடர்ந்து எழுதுவோம். உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றிகள் ஆழியூரான்.

     
  • At May 3, 2007 at 7:49 PM, Blogger கானா பிரபா said…

    தொடர்ந்தும் எழுதுங்கோ ரமா, மன்னிக்கவும் நந்தியா

     
  • At May 4, 2007 at 10:07 AM, Blogger நந்தியா said…

    தொடர்ந்தும் எழுதுங்கோ ரமா, மன்னிக்கவும் நந்தியா
    ஃஃஃஃஃஃஃஃஃ
    என்ன கானா பிரபா ராமன் சாமியில் நல்ல பக்தி போலை? எனது பெயருக்கு பதிலாக ரமானை கூப்பிட்டு பதில் எழுதுகின்றீர்கள்.
    உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றிகள்.

     
  • At May 12, 2007 at 11:00 PM, Blogger Bobby said…

    Nanduya!

    Haha!!
    Prabaharan master taught you science in tuition class?!

    Once he was my class teacher!
    Can you imagine the situation?!
    :-)

    Seems like you were in Urumpirai.

     
  • At May 28, 2007 at 7:11 AM, Blogger நந்தியா said…

    ஆ Bobby நாங்கள் அந்த ஓரு மணி நேரம் ரீயுசனில் இருக்கவே படும் பாடு. நீங்கள் எப்படி அவரை சமாளித்தீர்கள்?

     
Post a Comment
<< Home
About Me

Name: நந்தியா
Home: Canada
About Me:
See my complete profile
Previous Post
Archives

Links
Powered by

Free Blogger Templates

BLOGGER