வாடாமல்லி
Tuesday, May 1, 2007
ஒரு கதை
சில்லென்ற மழைத்தூறல் முகத்தில் பட சுய நினைவுக்கு வந்தாள் விது. அன்பான அம்மா கண்டிப்பையே முகத்தில் வைத்திருந்தாலும் பாசத்தை மழையாக பொழியும் அப்பா. குட்டி என்று செல்லமாக நுள்ளியும் கிள்ளியும் விளையாடும் மூன்று அண்ணாமார்கள். பூத்துக்குலுங்கும் மல்லிகை பந்தலின் கீழ் நாற்காலியை இழுத்து போட்டு விட்டு நிலா ஒளியிலே ஆயிரம் ஆயிரம் செல்ல மொழி பேசியவள் தான் இந்த விது. அப்பா சாப்பிடும்போதும் சரி அம்மா சாப்பிடும்போதும் சரி இல்லாவிடின் அம்மம்மா சாப்பிடும்போதும் கூட ஒரு பிடி உண்பாள். ஏன் நாய்க்கு சாப்பாடு போடும் போதும் ஓரு முறை சாப்பிடவேண்டியது தானே? என்ற அண்ணான்மார்களின் நக்கல். இப்படியாக இன்பத்தையே கண்டு பழகியவளுக்கு வாழ்க்கையின் மறு பகுதியில் துன்பம் என்று ஒன்று இருக்கு என்பது அப்போது தெரியவில்லை.

பாடசாலை பருவமும் வந்தது. படிப்பில் மிகுந்த கெட்டிக்காரி என்று சொல்லமுடியாது. ஆனால் ஆசிரியர்களிடம் அடி வேண்டும் சந்தர்ப்பங்கள் குறைவு தான். பருவ வயதையும் அடைந்தும் விட்டாள். நாட்டின் நிலமை காரணமாக ஒவ்வொரு அண்ணண்மாரும் கண்ணீர் மல்க அந்த வீட்டை விட்டு என்ன நாட்டையே விட்டு போனார்கள். ஒரு அதிகாலை பொழுதில் அம்மம்மாவும் இயற்கையை ஏய்தி விட்டார். கடைசியில் எஞ்சியது அப்பாவும் அம்மாவும் அவளும் தான். அண்ணன்மார்களின் நக்கல் பேச்சுக்களை கோபத்துடனே ரசித்து வந்தவளுக்கு எல்லாமே வெறுமையாகின.

அண்ணன்மார்களும் போன நாட்டில் இருந்து வாரத்துக்கு ஒரு முறை கடிதம் போட்டார்கள். கடிதத்துடனே அழகான படங்கள். காருடன் நின்று ஓரு படம். மாடிப்படிகளில் நின்று இன்னொரு படம். அழகான புற்றரையில் நின்று ஓரு படம் என்று வீட்டிலிருக்கும் அல்பங்கள் நிறைந்தது. ஒவ்வொரு கடிதத்திலும் வெகு சீக்கிரம் உங்களையும் இவ்விடம் அழைத்து விடுவோம் என்கின்ற வேதவாக்கியங்கள் வேறை. அன்புக்கு பதிலாக பணம் வீட்டில் கொட்டத் தொடங்கியது. ஆகா இனி இங்கு படித்து என்ன செய்ய போகின்றேன்? விமான நிலையத்தை அடைந்தவுடன் ஆங்கிலம் தானாகவே வந்து நாக்கில் ஒட்டுக்கொள்ளும் என்ற நினைப்பில் படிப்பில் கொஞ்சம் இருந்த ஆர்வத்தையும் இழந்தாள். கனவு உலகத்தில் சஞ்சரிக்க தொடங்கினாள். ஒவ்வொரு உடுப்புக்களும் வாங்கும் போதும் கனடாவிற்கு கொண்டு போக கூடிய உடுப்பாக தான் வாங்குவாள். கனடா போனால் இவர்கள் எல்லாம் எதற்கு என்ற எண்ணத்துடன் நெருங்கி வந்த தோழிகள் எல்லோரையும் விட்டு விலத்தினாள்.

ஓரு அழகான காலை நேரத்தில் பூந்தோட்டத்தில் அழகாக பூத்து குலுங்கியிருந்த ரோஐh பூவைப்பார்த்து தன்னையே மறந்து நின்றாள். காகங்கள் கரைந்து கொண்டு இருக்கையில் வானத்தில் ஒரு இரைச்சல். அந்த இரைச்சல் பேரிரைச்சலாக மாறி ஏதோ ஒரு பெரிய சத்தம் கேட்டது மட்டும் தான் அவளுக்கு தெரிந்தது. சிறு துளி ஒன்று முகத்தில் பட துடித்து எழுந்தாள். எங்குமே புழுதி மண்டலமாக இருந்தது. அழுகைக்குரல் அந்த பகுதியையே அதிர வைத்துக்கொண்டிருந்தது.

தனது முகத்தில் பட்ட துளியை தடவி பார்த்தாள். ஐய்யோ என்ன இது இரத்த துளி எல்லோ என்று அதிர்ந்தாள். நினைவு வந்தவளாக அம்மா அப்பா என்று கத்திக்கொண்டே வீட்டுப்பக்கம் ஒடினாள். ம்ம் அம்மா அப்பா சிரித்தபடியே ஒருவர் மேல் ஓருவர் தலைசாய்ந்து படுத்து இருந்தனார் எப்பவும் முகத்தை கடுமையாக வைத்திருக்கும் அப்பா கூட அன்று சிரித்தபடி படுத்திருந்தார். அந்த முற்றத்து மல்லிகை முற்றாக கருகிக் கிடந்தது. ஒடி வந்து பெற்றோரை கட்டி அணைத்து அழுதாள். அழுவதற்கு வார்த்தைகள் தெரியவில்லை. ஆனால் அம்மா அப்பா இனி உயிருடன் இல்லை என்ற உண்மை மட்டும் அவளுக்கு மனதில் உறைத்தது. யாருக்கு யார் ஆறுதல் கூறுவது? இவளின் வீட்டில் இருவர் சாவு என்றால் பக்கத்து வீட்டு சாமினி அக்கா வீட்டில் மூவர்.

கடைசி நேர கடமைகளை செய்வதற்கு என்றாலும் ஆண்பிள்ளைகள் வேண்டுமே என்ற ஆதங்கம் எல்லோர் மனதிலும் ஒலிக்கின்றன. பெற்றோர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியை அறியவே அண்ணாக்களுக்கு ஆறு மாதம் செல்லப்போகின்றது. இதற்குள் கடமைகளை முடிக்க எப்ப வரப்போகின்றார்கள்? இங்கு நான் அம்மாக்கும் அப்பாக்கும் இறுதி கடமைகளை செய்யும்போது அங்கு அண்ணாக்கள் நண்பர்களுடன் படம் பார்த்து சிரிப்பார்களோ? இல்லை நான் இங்கு சிதை முட்டும்போது நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பார்களோ? என்று நினைத்தவளுக்கு வழிந்த கண்ணீர் துளிகளை அருகில் இருந்த நண்பிகளின் கைகள் மாறி மாறி துடைக்கின்றன. இந்த துயர நேரத்தில் ஆறுதல் கூறி அணைக்க வேண்டிய கைகள் எட்டாத தூரத்தில்.


சுடலைப் பக்கம் போகதை எதாவது பிடித்து விடும் என்று சொல்லி அவளை பாதுகாத்த அம்மா தன் இறுதி கடமைக்காக தன் மகள் தன்னுடன் அங்கு வருவாள் என்று நினைத்து இருப்பாளா? பெண் பிள்ளைகள் என்றால் இந்த இடத்துக்கு எல்லாம் போகக்கூடாது என்று போக கூடிய இடங்களை படம் கீறி காட்டும் அப்பா தன் மகள் தன்னுடன் காடு வரை வரப்போகின்றாள் என்பதை அறிவாரா? அம்மாக்கும் அப்பாவிற்கும் வித விதமான படங்கள் அனுப்பும் அண்ணண்மார்கள் பெற்றோரின் உடலை சாம்பலாக கூட பார்க்க இயலாமல் இருக்கும் என்பதை அறிந்து இருப்பார்களா? இவற்றுக்கு எல்லாம் காரணம் என்ன? சிங்களவன் நம்மை அடிமைபடுத்தியதாலா? எனது வீடு எனது சொந்தம் என்று நமக்கு நாமே ஓரு வட்டம் போட்டு இருந்தது தான் காரணமா? இன்று உறவுகளை இழந்து தனிமரமாக நான் நாளை யாரோ? இதற்கு முடிவே இல்லையா? என்று யோசித்தவள் கண்ணீரை துடைத்தாள். புது உணர்வு முகத்தில் தெரிந்தது. "அண்ணண் பேரை சொல்லு உடன் அணி வகுத்து நில்லு அந்தோ அழிக்க வந்த எதிரி மீது அணல் எடுத்து செல்லு" என்ற பாடல் வரிகள் அவள் மனதில் ஒடிக்கொண்டு இருந்தது.

Labels:

posted by நந்தியா @ 6:37 PM
0 Comments:
Post a Comment
<< Home
About Me

Name: நந்தியா
Home: Canada
About Me:
See my complete profile
Previous Post
Archives

Links
Powered by

Free Blogger Templates

BLOGGER