வாடாமல்லி
Sunday, May 6, 2007
7 வயதில் ஏறத் தொடங்கிய மேடை
"எத் தொழிலை செய்தாலும் எந்நிலையில் இருந்தாலும் சித்தத்தை சிவனடியில் வைத்தவர்களே சிவனாடியார்கள்."
இந்த வாக்கியத்தை இந்து சமயத்தவர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள்.
ஆனால் இந்த வாக்கியம் எனக்கு பல வித அனுபங்களை வாழ்க்கையில் கற்றுக் கொள்ள உதவிய வசனம்.
அப்போது 6 வயது இருக்கும். எங்கள் ஊரில் உள்ள சிவபூதராயர் கோவிலில் ஒவ்வொரு மகா சிவராத்திரி தினத்திற்கும் பேச்சுப் போட்டிகள் நடைபெறும். அதற்காக 6 வயதில் ஏறிய மேடையில் கதறிய முதல் வசனம் தான் இது. அந்தப் போட்டியில் தொடங்கியது தான். அதற்குப்பின் ஏறிய மேடைகள் எண்ணிலடங்காது.(பரிசுகள் கிடைத்ததோ இல்லையோ என்பது வேறு கதை) பேச்சுப் போட்டிகளில் இருந்து கட்டுரைப்போட்டி வினாடி வினா போட்டி சைவ சமயப்போட்டி கவிதைப் போட்டி அப்படியே பல போட்டிகளில் பங்குபற்ற அடித்தளம் இட்டது அந்த பூதராயர் கோவில் மேடை தான்.
பாடசாலையில் கொத்தனி, கோட்டம், வலையம், மாவட்டம் எனத் தொடந்த போட்டிகள் எண்ணிலடங்காது.

நான் பங்குபற்றிய சில மறக்க முடியாத போட்டிகளை இங்கு நினைவு கூறப்போகின்றேன். வாசித்துப் பாருங்கள். அதே போட்டிகளில் நீங்களும் பங்குபற்றி எங்களிடம் தோற்று புற முதுகு காட்டி ஓடி இருக்கலாம். (எல்லாம் ஒரு வீர வாசனம் தான்)


எங்கள் பாடசாலையில் மூம்மூர்த்திகள் என செல்லமாக பொறமையாக அழைக்கப்பட்டவர்களில் நானும் ஓருத்தி என்று பெருமிதம் அடைந்த காலம் அது. அத்துடன் எதாவது போட்டிகள் என்றாலும் நம்மை கேட்கமாலே பெயரை பதிந்து விடுவார்கள் நம் ஆசிரியார்கள். ஒன்றில் மட்டும் நான் ஸ்கேப் ஆகிவிடுவேன். ஆதாவது ஆங்கிலம் சம்பந்தமான போட்டிகள் என்றால் நான் ஏன் ஆசிரியார்கள் கூட என்னுடைய பெயரை உச்சரிக்க மாட்டார்கள். (இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் அப்போது எனக்கு இருந்த ஆங்கில மொழியின் திறமையை)

1) அப்போது 8ம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது நாவலர் தின பேச்சுப்போட்டிக்குரிய விண்ணப்படிவம் எமது பாடசாலைக்கு வந்தது. வழமை போல் ஆசிரியார்கள் எமது பெயரை போட்டு அத்துடன் 5 விதமான தலைப்புகளையும் தந்தார்கள். போட்டி விதி முறைகளில் ஒன்று அவர்கள் அன்று சொல்லும் தலைப்பில் தான் பேச வேண்டும். அதுவும் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டி அது. யாழ் இந்துக்கல்லூரியில் தான் போட்டி நடைபெற்றது. அந்தப் பேச்சுக்களை வாங்கி அதை அப்படியே எமது கொப்பிகளில் எழுதி விட்டு நாங்கள் எங்களுடைய மற்றவேலைகளை கவனித்து கொண்டிருந்தோம். போட்டிக்கு ஒரு கிழமை முன் வகுப்புக்கு வந்த சமய பாட ஆசிரியார் 3பேரையும் எழுப்பி ஒரு தலைப்பை சொல்லி வகுப்புக்கு முன்னால் பேசும்படி கூறினார். முழிப்பதை தவிர வேறு வழி எமக்கு அப்போ தெரியவில்லை. உடனே மூவரையும் வெளியில் அழைத்து ஒவ்வொரு துணுடன் நிறுத்தி அந்த தலைப்புக்குரிய பேச்சை பாடமாக்கி சொல்லிவிட்டு தான் உள்ளே வரவேணும் என்று கட்டளை (சத்தியமாக அது அன்புக் கட்டளை இல்லை). அந்த நாள் முழுவதும் அந்த தூணை கட்டிப்பிடித்துக் கொண்டு எல்லோரும் வினோதமாக பார்த்து கொண்டு போக பாடமாக்கினோம். (படமாக்கினோம் என்பதை விட வேடிக்கை பார்த்தது தான் கூட) கடைசியில் 5 தலைப்பையும் ழுழுமையாக படமாக்கி (கரைத்து குடித்து ) விட்டுத் தான் போட்டியில் பங்குபற்றினோம். ஆனால் முதல் 3 இடத்திற்குள் வர முடியவில்லை என்பது கவலைக்குரிய விடயம்

அடுத்தாக 7ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது திருவள்ளுவர் விழா பேச்சுப்போட்டி. யாழ்ப்பாணத்தில் உள்ள கிராமங்களில் ஒன்றான இருபாலை பிள்ளையார் கோவிலில் நடந்தது. அது வயதின் அடிப்படையில் நடந்தது. ஆகவே எங்கள் பிரிவில் 16 வயது வரை பங்கு பற்றினார்கள். இந்த வயது விபரம் பற்றி நமக்கு யாரும் சொல்லவில்லை. நாழும் ஒவ்வொரு நாளும் விடிய எழும்பி கத்து கத்து என்று கத்தி நமது கத்தலை கேட்டு பக்கத்து வீட்டுக்காரரையும் எழும்பி எங்கள் சுக்ரபாதத்தை கேட்கட்டும் என்று கத்தி பாடமாக்கினோம். மண்டபத்துக்குள் போய்பார்த்தால் பெரிய அக்காமார்கள் அண்ணாமார்கள் எல்லாரும் எங்கள் பிரிவினார் உள்ள மண்டபத்தில் இருக்கினம். என்ன என்று கேட்டால் அவர்களும் எங்கள் பிரிவில் பேசபோகினமாம். அதைக் கேட்டு பிடித்த நடுக்கம் தான். பின்னார் நடந்த பேச்சுப்போட்டிகளில் எல்லாம் அந்த நடுக்கம் வந்து போனது.

அடுத்து எமது ஊர் ஞானவைரவர் கோவிலில் நடந்த திருக்குறள் மனனப் போட்டி. எங்கள் பிரிவினருக்கு முதல் 20 குறள்களும் படமாக்கி அதன்பொருளையும் சொல்லவேண்டும். அதில் எங்களை விட வயது குறைந்தவர்கள் எம்முடன் பங்குபற்றினார்கள். அந்த செய்தி எமக்கு மிக்க சந்தோசம். வெற்றி நமக்கு தான் என்று வீராய்ப்பு வேறை. போட்டி போட்டு கொண்டு வந்து கடைசியாக முதல் மூன்று இடங்களுக்குரிய போட்டி நடந்தது. அதில் போட்டிகள் மிக மும்மரமாக நடந்து கடைசிவரைக்கும் போட்டி போட்டு கொண்டிருந்ததவர் என்னை விட வயதில் குறைந்த பக்கத்து விட்டுப் பையன். நடுவர்கள் மாறி மாறி கேள்வி கேட்க இருவரும் பதில்கள் சொல்லிக் கொண்டிருந்தோம். கடைசியில் நடுவர்கள் பூவா தலையா போட்டு இரண்டாவது மூன்றாவது பரிசில்களை கொடுத்தார்கள். அப்போது தான் புரிந்தது திறமையோடு கொஞ்சம் அதிஷ்டமும் நம்ம பக்கம் வீசவேண்டும் என்று.

இன்னும் சுவையான போட்டி அனுபவங்கள் இருக்கு. கனக்க எழுதி போரடிக்கமால் அடுத்த பதிவில் இடுகின்றேன்..


Labels:

posted by நந்தியா @ 8:14 PM 3 comments
About Me

Name: நந்தியா
Home: Canada
About Me:
See my complete profile
Previous Post
Archives

Links
Powered by

Free Blogger Templates

BLOGGER