வாடாமல்லி
Friday, August 10, 2007
கற்பனை அல்ல நிஐம்
அதிகாலை குளிர் காற்று மெதுவாக சின்னதாக திறந்து விட்டிருந்த யன்னல் இடைவெளிக்குள்ளால் உள்ளே வீசிக் கொண்டிருந்தது. குளிருக்கு இதமாக போர்வையை இழுத்து திரும்பவும் உறங்க எத்தணித்த போது கடிகாரம் அலறத்தொடங்கியது. அதை அணைத்துவிட்டுத் திரும்பிப் படுக்க எத்தணித்த போது இன்று சகோதிரியை பாஸ்போர்ட் ஒபிஸ் கூட்டி செல்வதாக கூறியிருந்தது ஞாபகம் வந்தது. போகா விட்டால் கடியோ கடி என்று ஒரு மாதத்துக்கு பல்லவி பாடி கொண்டிருப்பாள் எனது அக்கா.

‘ஆகா இனியும் தூங்கினால் சரிவராது. பாஸ்போர்ட் ஒபிஸ்க்கு போய்விட்டு அப்படியே வேலைக்கும் போக வேண்டும்’ என்ற நினைப்பு கசப்பாய் இருக்க கண்ணைக் கசக்கியவாறே எழுந்தேன். குளித்து வேலை யுனிபோர்ம் ஒன்றைப் போட்டுக் கொண்டு காரை எடுத்துக் கொண்டு சப்வே ஸ்ரேசனை அடைந்தேன். சிறிலங்கன் பாஸ்போர்ட் ஒபிஸ் டவுண்ரவுண் ஏரியாவில் இருக்கின்ற படியால் அந்த பகுதிகளில் கார் ஓடுவது கடினம். அதுவும் காலையில் சொல்லவே தேவையில்லை. ஆகவே ரெயினில் போவது இலகு என்றாபடியால் சகோதரியை ரெயில்வே ஸ்ரேசனில் சந்திப்பதாக சொல்லியிருந்தேன். சனக்கூட்டம் நிறைந்த அந் நிலையத்தில் ஒருவாறு சகோதரியைத் தேடிப்பிடித்து இருவரும் பயணிக்கத் தொடங்கினோம். எம்மிடம் இருந்த விலாசத்தின் படியே போய் கீழே இருந்த பாதுகாவலரிடம் சிறிலங்கன் எம்பசி எத்தனையாவது தளம் என்று கேட்க அவர் 4 என்று சொன்னார். மேலே போய் கதவைத் திறந்து கொண்டு உள்ளே போக நேரம் 9:30.

கதவைத் திறந்தவுடன் நேர் எதிரில் இருந்த சுவரில் சிவப்பு சால்வையுடன் மகிந்தாவின் படத்தைப் பார்த்தவுடன் மனதில் ஒரு வேண்டப்படாத இடத்திற்கு வந்துவிட்ட உணர்வு. 9 மணிக்கு அலுவலகம் திறந்து வேலையை ஆரம்பிக்க வேண்டிய அலுவலர்கள் ஒருவரையும் காணவில்லை. சரியாக 9:35க்கு ஒருவர் மிகவும் அவசரமாக வந்து உள்ளே இருந்த அறையை நோக்கி நடந்தார். அந்த அறையில் குழுமி இருந்தவர்கள் தமிழர்கள் சிங்களவர்கள் மட்டுமன்றி வேறு இனத்தவர்களும்இருந்தார்கள். வந்தவர் ஒன்றுமே சொல்லவில்லை. கண்ணாடியால் அடைக்கப்பட்ட ஒரு அறையில் இருந்தவாறே சைகை மூலம்ஒவ்வொருவராக அழைத்தார். அவரின் அந்த செய்கை அங்கு இருந்த அனைவரையும் அருவருக்க வைத்தது. எவ்வளவு சன நெருக்கடியானாலும் வரிசை முறையில் சென்று தேவைகளை நிறைவேற்றப் பழகிக் கொண்ட யாவருக்கும் அவரின் செய்கை அசெளகரியமாக இருந்திருக்கும் என்பது நிச்சயம். அவரின் சைகையைக் கவனித்து கடைசியில் வந்தோர்பலரும் முன் சென்று அவருடன் கதைக்க கூடிய வாய்ப்பு கிட்டியது.

எமது முறையும் வந்தது. அவரின் முகத்தை அவதானித்தேன். 50 வயது மதிக்கத்தக்கவர். மிகவும் கடுப்பாகவே முகத்தை வைத்திருந்தார். முதலில் அவர் கதைத்த ஆங்கில மொழியின் உச்சரிப்பு எமக்கு விளங்கவில்லை. மிகவும் உன்னிப்பாக கவனித்து தான் பதில் சொல்லி கொண்டிருந்தோம். எனது சகோதரியின் விண்ணப்பப் படிவத்தில் அவரின் மகனையும் சேர்க்க வேண்டும். ஆனால் அதற்காக வேறு விண்ணப்பப் படிவம் எடுப்பதோ என்னவோ என்று எமக்கு சரியாகத் தெரியாது . அவர் கனக்க ஏதோவெல்லாம் சொன்னார். அவரின் வார்த்தைப் பிரயோகங்கள் ஒருவரைக் கோபத்தில் ஏசுவது போல் தான் தெரிந்தது. ஒவ்வொரு கேள்விக்கும் நேரம் எடுத்து ஏதோ தான் கனக்க செய்துகொண்டு இருப்பதாக பீலா காட்டி கேள்விகளைத் திருப்ப திருப்ப கேட்க வைத்துக் கொண்டிருந்தார். பின்னர் இன்னொரு படிவத்தைத் தந்து நிரப்பச் சொன்னார். சரி என்று நிரப்பப் பக்கத்தில் இருந்த கதிரையில் அமர்ந்தவுடன் பக்கத்தில் இருந்த வெள்ளை இனத்தவர் கேட்டமுதல் கேள்வி "whatz wrong with him?" பதில் சொல்ல முடியாமல் இலேசாகச் சிரித்தோம்.

அப்படியே பலரின் கேள்விக்கு மிகவும் முரட்டுத்தனமாகவும் கோபமாகவும் பதில் சொல்லி கொண்டிருந்தார். அப்போது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. உடனே மிகவும் சத்தமாக Hello என்றார். பொதுவாக அலுவலகங்களில் தொலைபேசி இணைப்புக்கு பதில் அளிக்கும்போது முதலில் மறுமுனையில் இருப்பவரை greet பண்ணிவிட்டு தான் பின்னர் பிரச்சினைகளைக் கேட்பார்கள். இவர் சொன்ன பதில்கள் மறுமுனையில் கதைத்தவர்களுக்கு விளங்கியிருக்குமோ என்னமோ? எமது முறை மீண்டும் வந்தது. எல்லாவற்றையும் சரி பார்த்தார். திரும்பவும் இன்னொரு படிவம் தந்து நிரப்பச் சொன்னார்.(அதை முதலே சேர்த்துத் தந்திருக்கலாம்)

கோபம் வந்தாலும் என்ன செய்வது பாஸ்ப்போர்ட் தேவை என்பதற்காக அவர் சொன்ன யாவற்றையும் கேட்டு செய்துகொண்டிருந்தோம். எல்லாம் முடிந்தது. 600 டொலர்ஸ்ம் கட்டியாச்சு. இறுதியாக ஒரு கேள்வி கேட்டேன். Is it ok if anybody can come & pick up the passport? நான் கேள்வி கேட்டவுடன் அவர் கேட்காதமாதிரி இருந்தார். அப்போது அருகில் இருந்த அவரின் உதவியாளார்(அவரும் சிங்களவர் தான்) yes, make sure one of the family membercome and pick it up என்று அவர் சொல்லி வாய் மூடும் முன் இந்த முகாமையாளர் "கட்டவட்ட" என்று தொடர்ந்து ஒரு 2 நிமிடங்கள் அவரை இடைவிடாது சிங்களத்தில் மிகவும் கேவலமாகப் பெரிதாகத் திட்டிக் கொண்டிருந்தார். அவர் திட்டியதில் எனக்கு விளங்கியது எனது அலுவல்களில் நீ தலையிடாமல் வாயை மூடிக் கொண்டு இரு. அந்த உதவியாளாரைப் பார்க்க மிகவும் பரிதபமாக இருந்தது. அங்கு இருந்த அனைவரும் சிறு திகைப்புடன் கண்ணாடி அறையைப் பார்த்தார்கள்.
அவரின் செய்கைகளை நினைக்க என்னுள் பல கேள்விகள். என்னவென்றால் அங்கு அநேகமான தமிழ் மக்கள் கூடியிருந்ததால் அவருக்கு வந்த வெறுப்பு தன்மையால் அப்படி நடந்து கொண்டரா? அல்லது தனது முதாலாளித்தனத்தை அங்கு காட்ட முற்பட்டரா? இலங்கையில் இத்தகைய செயற்பாட்டை சர்வசதாராணமாக காணலாம். ஆனாலும் கடல் கடந்து வந்து மிகவும் உயர்ந்த பதவியில் (அதாவது இலங்கை மக்களை பிரதிபடுத்த கூடியவராக) இருப்பவர் இத்தகைய முறையில் நடப்பது அந்த நாட்டில் மற்றவர்கள் வைத்திருக்கும் மதிப்பைக் குறைத்தே காட்டும் (இல்லாட்டி ஏதோ மரியாதை இருக்கோ என்று நீங்கள் முணுமுணுப்பதுகேட்குது). கதவைத் திறந்து வெளியே வரும்போது தேனிசை செல்லப்பா அவர்களின்"நாங்கள் வேறு நாடு ஐயா நீங்கள் வேறு நாடு ஐயா" என்றா பாடல்வரிகள் நினைவில் வந்தன:-)

Labels:

posted by நந்தியா @ 5:50 AM 3 comments
About Me

Name: நந்தியா
Home: Canada
About Me:
See my complete profile
Previous Post
Archives

Links
Powered by

Free Blogger Templates

BLOGGER