தபால்பெட்டியை அடிக்கடி திறந்து பார்த்தாள் சுமதி. வேலைக்கும் நேரம் ஆகின்றது... அட எதிர்பார்த்தால் தான் எப்பவும் லேட்டாகத்தான் வருவான் இந்த தபால் காரன் என்று நினைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டாள்.
அதே நினைப்பில் இருந்தவளுக்கு வேலையிலும் நிம்மதியாக இருக்க முடியலை. வந்திருக்குமோ வந்திருக்குமோ என்று ஏக்கிக் கொண்டிருந்தாள். வரவில் போடவேண்டியதை செலவில் இட்டு மனேஐரிடம் திட்டும் வாங்கிகொண்டாள். தலையிடி என்று சாட்டு சொல்லி விட்டு அவசரமாக வீடு திரும்பிளாள். பாதையிலும் பல நினைவுகள் அவளுக்கு.... வந்திருக்குமா? என்று. அம்மாவிற்கு போன் பண்ணி கேட்டுவிடலாமோ என நினைத்து கைத்தொலைபேசியை எடுத்தாள். "சீ அம்மாவை இனியும் போன் பண்ணி கேட்டால் போனிலே அடித்து விடுவா" என்று நினைத்து வைத்து விட்டாள். " என் ஏக்கம் யாருக்கு புரியப்போகின்றது" என்று ஏக்க பெருமூச்சு விட்டபடியே வீடு வந்து சேர்ந்தாள். ஸூ கழட்ட முன் தாபல்பெட்டியை பார்த்தாள். வாவ் !!!!!!!! என்று துள்ளிக்குதித்தாள். இவ்வளவு நேரமும் யாருடைய கடிதத்துக்காக காத்திருந்தாளோ அந்த அழகிய கையெழுத்துடன் ஒரு கடித உறையை கண்டாள். நச்சென்று அதுக்கு ஒரு முத்தமும் கொடுத்தாள். விரைந்து சென்று ஸூ கழட்டி விட்டு நேராக தன் அறைக்குள் நுழைந்து கதவை சாத்தினாள்.
இவற்றை எல்லாம் சோபாவில் இருந்து அவதானித்த அம்மா "ம்ம் வந்திட்டுது அக்கும் இனி இவளுக்கு இரண்டு மூன்று நாளைக்கு சாப்பாடு தேவையில்லை". அது அவளின் வழமையான நச்சரிப்புத்தான். சுமதி அதை கண்டு கொள்ளவில்லை. உள்ளே சென்ற சுமதி கடிதத்தை உடைத்தாள். ம்ம்..... ஆளைப்போல கையெழுத்தும் அழகு தான் என்று மனதில் நினைத்துக்கொண்டு கடிதத்தை வாசிக்க தொடங்கினாள். அந்த நேரத்தில் "நினைத்து நினைத்து உருகினேன்......உன்னால் தானே உயிர் வாழ்கின்றேன" என்ற பாடலின் ஒலியுடன் கைத் தொலைபேசி அலற.... . சீ நிம்மதியாய் ஒரு கடிதம் கூட படிக்க வழியில்லை என்று நினைத்தபடி தொலைபேசியை எடுத்து "யாராய் இருந்தாலும் சுருக்கமாய் ஒரு வரியில் கதையை கூறி விட்டு வையுங்கள்" என்று கூறிக் கொண்ட இருக்கும்போதே யாரோ கோபத்தில் தொலைபேசியை டங்கென்று வைக்கும் சத்தம் கேட்டது. குட் என்று நினைத்து விட்டு கடிதத்தில் பார்வையை மீண்டும் செலுத்தினாள். "அன்பின் அம்மாவிற்கு!" இது அவள் எதிர் பார்க்காத ஆரம்பவரிகள்... அந்த வரிகளை மீண்டும் மீண்டும் மீண்டு வாசித்தாள். வயிற்றில் இனம் புரியாத உணர்வு ஒன்று எழுந்தது. மிகுதியை வாசிக்க முடியவில்லை அவளுக்கு. கண்களில் அவளை அறியாமல் வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டாள்... என்ன இது அந்த அம்மா என்றா சொல்லுக்கு இவ்வளவு சக்தியா? மீண்டும் பார்வையை செலுத்தினாள் கடிதத்தில். " அம்மா நீங்கள் அனுப்பிய கடிதமும் பிறந்தநாள் கார்ட்டும எனக்கு கிடைத்தது. சந்தோசமாய் இருந்தது. உலகில் எனக்கு யார் இருக்கிறாங்க என்று நினைத்த எனக்கு ஆறுதலாக... என்னை கவனித்துக்கொள்ளும் அன்னையாக எனக்கு கிடைத்தீர்கள்... என் முகம் கூட காணாமல் என்னை வழிநடத்தும் உங்களை பெற்றுக்கொண்டதுக்காக நான் சந்தோசப்படுகிறேன். இறவனுக்கு நன்றி கூறுகிறேன்.... ஆனாலும் சிறு கவலையும் கூட இருக்கிறது.... எனக்கு நல்ல அம்மாவாக நீங்கள் கிடைத்திருப்பது போல் ஏன் இங்கு இந்த முகாமில் இருக்கும் மற்ற சகோதர சகோதரிகளுக்கு கிடைக்கலை?? உதவிக்கு நன்றியோடும் முகாமில் இருக்கும் மற்றவர்களுக்கும் என்னைப்போல் ஒரு அம்மா கிடைக்குமா? என்று கேள்விக் குறியோடும் அந்த கடிதத்தை முடித்திருந்தது அந்தக் குழந்தை. ம்ம்.......... எனக்கு கிடைத்த அம்மா போல் மற்ற குழந்தைகளுக்கும் கிடைக்காதா? என்றா கேள்விக்கு சுமதிக்கு பதில் தெரியவில்லை.
அப்போது தான் அவளுடைய குடும்ப வைத்தியார் எல்லாவித மருத்துவ சேக்கப்பையும் முடித்து இனி உனக்கு அம்மா பாக்கியம் ஆகும் சந்தர்ப்பம் குறைவு என்று நமட்டு சிரிப்புடன் சொல்லி தந்த மருத்துவ அறிக்கை அவளைப் பார்த்து சிரித்தது. நாளைக்கு கட்டாயம் டொக்டரிடம் போய் இந்த கடிதத்தை காட்டவேண்டும். எனக்கு அம்மா பாக்கியம் கிடைத்து விட்டது என்று சொல்லி அந்த நமட்டுச்சிரிப்பை நானும் சிரிக்க வேண்டும் என்று நினைத்து விட்டு கடித்தத்தை மீண்டும் படிக்க தொடங்கினாள். Labels: கதை |